சுந்தர்.சி இயக்கத்தில் வெற்றிகரமாக மூன்று பாகங்கள் வெளியாகியுள்ள படம் அரண்மனை. ஹாரர் படம் என்றாலும் இந்தப் படங்களில் இருக்கும் நகைச்சுவையைப் ஃபேமிலி அடியன்ஸ் அதிகம் ரசித்துள்ளார்கள். தற்போது இந்த வரிசையில் உருவாகி வரும் படம் அரண்மனை 4. ராஷி கண்ணா, தமன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். விடிவி கணேஷ், யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
அரண்மனை படத்தில் தமன்னா (Tamannaah Bhatia) முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அரண்மனை படத்தின் ‘அச்சச்சோ’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தது பலவிதமான விமர்சனங்களை எழுப்பியது. பேய் படத்தில் சம்பந்தமே இல்லாமல் ஏன் இப்படியான பாடல் வைக்க வேண்டும் என்று சுந்தர்-சியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த சுந்தர்.சி “அரண்மனை படத்தின் பாகங்கள் எல்லாமே பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களே. இந்த ஒரு பாடலும் படத்தில் இறுதியில் இடம் பெற உள்ளது, மற்றபடி படத்தை குழந்தைகளுடன் பார்க்கும்படியாக தான் எடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது நடிகை தமன்னா அரண்மனை 4 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இத்துடன் அவர் “ இந்தப் படத்தில் நடிப்பது கொஞ்சம் சவாலானதாக எனக்கு இருந்தாலும் ஒரு சில ஸ்டண்ட் காட்சிகளை நான் ரசித்தே செய்தேன். அரண்மனை பட வரிசையில் நானும் இருப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி “ என்று தெரிவித்துள்ளார்.
வரும் மே மாதம் 3ம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.