கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார். பெவினஹள்ளி அருகே பிரச்சாரம் செய்தபோது, பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு, அங்கு வரவேற்பளிப்பதற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசினார்.
இதனால், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, ரூபாய் நோட்டுகளை வீசுவதன் மூலம் டி.கே சிவக்குமாரும், காங்கிரஸ் கட்சியினரும் கர்நாடக மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பதாகவும், இதே மக்கள் வரும் தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.