பொதுத்தேர்வில் எழுதும் மாணவர்கள் தேர்வுகளை நினைத்து அவ்வபோது மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர் என்று ஆய்வுகள் கூறியுள்ள நிலையில், அதனை போக்கு சில வழிமுறைகளை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்ளலாம்.
மாணவ, மாணவிகள் அனைவரும் தங்களது ஆண்டு இறுதி தேர்வுகளை எதிர்நோக்கி உள்ளனர். இந்த சமயத்தில் தூங்காமல் கண் விழித்து படிப்பது, சரியான உணவு பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளால் உடலில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும். அதே நேரத்தில் சில மாணவர்கள் தேர்வுகளை நினைத்து அதிக அளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். பற்றி வல்லுனர்கள் கூறுகையில், தேர்வுகளின் போது உண்டாகும் “எக்ஸாம் ஸ்டிரஸ்” என்பது நம் அனைவருக்கும் உண்டாகக்கூடிய ஒரு விதமான மன அழுத்தம் தான். நம்மில் அனைவருமே இதனை கடந்து தான் வந்திருக்கிறோம். இந்த தேர்வு பயத்தையும், தேர்வினால் உண்டாகும் மன அழுத்தத்தையும் சில எளிய முறைகளை பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கலாம் என்று கூறுகிறார்கள்.
அந்தவகையில், மாணவர்கள் முதலில் எந்த பாடத்தை எப்போது படிக்கவேண்டும், என்பது குறித்து திட்டங்களை வகுத்து அட்டவணை அமைத்து அதை பின்பற்றி படிக்கவேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், கடைசியாக படித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் கடினமான பாடங்களை முதலிலேயே படித்துவிடுவது மிகவும் நல்லது. எனவே, கடைசி நேரத்தில் எளிதான பாடங்களை விரைவாக படித்துவிடலாம். நீண்ட நேரம் படிக்கும்போது அவ்வபோது தேவையான அளவு இடைவேளை எடுத்துக் கொள்வது நமது உடலையும் உடலையும் ரிலாக்சாக வைத்திருக்க உதவும். இந்த இடைவேளை நேரங்களில் உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்ற மனதிற்கு இதமான மகிழ்ச்சி தரும் செயல்களை செய்யலாம்.
மேலும், படிப்பு சம்பந்தப்பட்ட புத்தகங்கள், எழுது பொருட்கள் ஆகியவற்றை சரியான இடத்தில் அடுக்கி வைப்பது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் எந்தெந்த பாடத்திற்கான புத்தகங்கள் எங்கெங்கு உள்ளன என்பதும், கடைசி நேரத்தில் ஏற்படும் தேவையற்ற பதட்டங்களையும் தவிர்க்க இது உதவும். முடிந்த அளவு உடல் இயக்கத்தை அதிகரிக்க கூடிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவது அவர்களது மனதையும் உடலையும் மகிழ்ச்சியாகவும் வலுவாகவும் வைத்திருக்க உதவும்.