வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர்கள் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள குரங்கம்மை பரிசோதனை மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது. தமிழகம் வந்த சிலருக்கு குரங்கு அம்மை இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அதில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் கேரளாவைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு உதவ மகப்பேறு மருத்துவர் தயார் நிலையில் உள்ளனர்.

கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட்டில் குரங்கு அம்மை நோய் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தோல், புண் மாதிரி, சிறுநீர், பிளாஸ்மா உள்ளிட்ட பரிசோதனைகள் குரங்கு அம்மை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும். சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் 187 நாடுகளில் இருந்து சென்னை வந்த செஸ் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரைக்கும் அதில் யாருக்கும் குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர்”. என்றார்.