முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பேசியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சி தான். எப்போது தேர்தல் நடந்தாலும் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், திமுக அமோக வெற்றி பெறும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வரையும், துணை முதல்வரையும் தொடர்ந்து ஒருமையில் பேசி வருவது அரசியல் அநாகரிகத்தின் உச்சம். மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலையின் கேலிக்கூத்து நடவடிக்கைகள் அளவின்றி போய்க் கொண்டிருக்கிறது. திடீரென்று செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, ஷூவுடன் வலம் வருகிறார். தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்கிறார்.
கார்ப்பரேட்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் ஆதரவாக அண்ணாமலை அரசியல் செய்து வருகிறார். எனவே, அவர் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பற்றி பேச எந்த தகுதியும், அருகதையும் இல்லை. துணை முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை ‘தற்குறி’ என்று சொல்லுமளவுக்கு, கீழ்த்தரமாக செயல்படுகிறார். தான் நாவடக்கம் அற்றவர், அநாகரீகமானவர் என்பதை தொடர்ந்து மக்கள் மத்தியில் நிரூபித்துக் கொண்டே உள்ளார் என்பதுதான் நிசர்சனம்” என்று தெரிவித்துள்ளார்.