அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது..
கடந்த ஆண்டு ஜூன் 23-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், அதற்கு பிறகு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் பொதுக்குழு நடத்தி முடிக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்..
இந்நிலையில் ஜூன் மாதம் நடந்த பொதுக்குழு தொடர்பாக கடந்த ஆண்டு சண்முகம் தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதி குமரேஷ் பாபு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இந்த மனு காலாவதியாகிவிட்டது என்று தெரிவித்தது..
ஆனால் ஓபிஎஸ் தரப்பில் “ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா என்று உரிமையியல் வழக்கில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. எனவே அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகிவிட்டதா அல்லது இருக்கிறதா என்ற ஓபிஎஸ் தரப்பு விளக்கத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அவகாசம் வழங்கி, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்..