பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை உயர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் நுகர்வோர் விவகாரப் பிரிவு செயலாளர் ரோகித் சிங் கூறுகையில், ”தற்போது, இந்தியாவில் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் கையிருப்பு போதுமான அளவு உள்ளது. இதனால், இப்போதைக்கு தானியங்களின் விலை உயர்வதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், மத்திய அரசிடம் 2.50 லட்சம் டன் வெங்காயமும் இருப்பு உள்ளது. இதையடுத்து, சில மாநிலங்களில் வெங்காயம் விலை உயர்ந்ததாக வந்த தகவலை அடுத்து அந்த மாநிலங்களுக்கு உடனடியாக வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 2.72 கோடி டன் அளவுக்கு பருப்பு வகைகள் பயன்படுத்தப்படுகிறது.
இதில், சுமார் 2 கோடியே 50 லட்சம் டன் பருப்பு வகைள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி பருப்பை தான் இறக்குமதி செய்கிறோம். இந்த ஆண்டு மட்டும் நம்மிடம் 43 லட்சம் டன் பருப்பு இருப்பில் உள்ளது. இந்நிலையில், இப்போதைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. அப்படி தேவை ஏற்பட்டாலும் கூட அதனை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் தயாராக உள்ளோம்” என்றார்.