fbpx

தமிழக டாட்டா நிறுவனத்தில் வேறு மாநில பெண்களுக்கு வேலையா…?

ஓசூர் டாட்டா மின்னணு நிறுவனத்தில் உத்தர்காண்ட் பெண்களுக்கு வேலையா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார் ‌

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், கர்நாடகத்தின் கோலார் பக்தியிலும் செயல்பட்டு வரும் டாட்டா மின்னணு நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்ற உத்தர்காண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்கள் தேர்வு செய்யப்படவிருப்பதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்களும், இளம்பெண்களும் வேலை கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையில் பிற மாநிலங்களிலிருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது.

உத்தர்காண்ட் மாநில திட்டக்குழுவிடம் டாட்டா குழுமம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் பழகுனர் பயிற்சித் திட்டம், தேசிய தொழில் பழகுனர் ஊக்குவிப்புத் திட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும், உத்தர்காண்ட் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் தாமி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக டாட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தர்காண்ட் மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாட்டா நிறுவனத்தின் நோக்கத்தைக் குறை கூற முடியாது. அதே நேரத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாட்டா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள ஜி.எம்.ஆர் தொழிற்பூங்காவில் தான் டாட்டா மின்னணு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதற்காக டாட்டா நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாட்டா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால் தான்.

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் ஆலைகளில் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும். ஆனால், டாட்டா நிறுவனத்திடம் பேச்சு நடத்தி, அந்நிறுவனத்தின் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க உறுதி பெறப்பட்டிருப்பதாக தெரிவித்த தமிழக அரசு, அதை உறுதி செய்வதற்கு பதிலாக உத்தர்காண்ட்டில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நலனை விட, தொழிலதிபர்களின் நலனைத் தான் தமிழக அரசு முக்கியமாக கருதுகிறது என்பதையே இது காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாததற்கு தொழிலதிபர்கள் மீதான பாசம் காரணம் போலும்.

ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தர்காண்ட் மாநிலத்திலிருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80% பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

English Summary

Are there jobs for women from other states in Tata in Tamil Nadu?

Vignesh

Next Post

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கப்போகுது..!! உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை கவனிச்சீங்களா..?

Thu Aug 29 , 2024
His supporters and DMK officials are waiting for Senthil Balaji to come out on bail soon.

You May Like