உச்சி முதல் பாதம் வரை பல்வேறு உடல்நல ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் செயலிழந்த சிறுநீரகத்தை சரிசெய்ய உதவும் மூக்கிரட்டை கீரையின் மருத்துவப் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
சாதாரணமாக சாலையோரங்களில் காணும் சில செடிகள், மிகப்பெரும் ஆற்றல் வாய்ந்தவை என்பதை அவற்றின் அளப்பரிய நற்பண்புகள் மூலமாக அறிந்திருப்போம். அந்த வகையில் களைச்செடி என விவசாயிகள் ஒதுக்கும் ஒரு செடிதான், மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, அவர்களின் ஆயுளை காக்கும் மூலிகையாக விளங்குகிறது. உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன.
மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது. சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் மூக்கிரட்டை வேரை 10 கிராம் அளவுக்கு எடுத்து, 100 மி.லி நீரில் கலந்து, அத்துடன் அரை தேக்கரண்டி சோம்பு சேர்த்து குடிநீராக பருகவேண்டும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். பக்கவிளைவுகள் ஏற்படாது. வேருக்கு மலமிளக்கும் தன்மை இருப்பதால், வயிற்றுக் கழிச்சல் அதிகமாக இருக்கும். சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் இது கரைக்கும். மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, வாத வியாதிகள் சீராகும்.
இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும். புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.
மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், மனதிற்கு உற்சாகத்தையும் உண்டாக்கும். மூக்கிரட்டை இலைகள், பொன்னாங்கன்னி இலைகள் மற்றும் கீழாநெல்லி இலைகள் ஆகியவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, அவற்றை நன்கு அரைத்து, சிறிதளவு மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, கலங்கலான பார்வை மற்றும் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் விலகி, கண் பார்வை, தெளிவாகும்.
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும். மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும். இந்த மருந்தை எடுக்கும் போது, மலக்குடலை சுத்தம் செய்யும் மூக்கிரட்டை வேரின் தன்மையால் மலம் இளகி, உடலுக்கு நன்மைதான் உண்டாகும்.
சூப் உடலுக்கு மிகவும் நல்லது. மூக்கிரட்டை கீரை சூப் எப்படி செய்வதென்று பார்ப்போம். முதலில் மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் 2 டம்ளர் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும். கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.