மகளிர் உரிமைத்தொகை குறித்த பல்வேறு வசதிகளை அரசு ஏற்படுத்தி கொடுத்தாலும், இந்த உரிமைத்தொகை குறித்த சில சந்தேகங்கள் இன்னும் தீராமலேயே உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 15ஆம் தேதி முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதற்கிடையே, உரிமைத்தொகை திட்டம் குறித்த சந்தேகங்கள், குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆட்சியர் அலுவலகங்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை விண்ணப்பதாரர்களே அறிந்து கொள்வதற்காகவே https://kmut.tn.gov.in என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆதார் இணைக்கப்படாத பயனாளிகளுக்கு அஞ்சல் துறை “மணியார்டர்” மூலமாக பணம் அனுப்பி வருகிறது. இப்படி இருந்தும் உரிமைத்தொகை குறித்த சில சிக்கல்கள் எழுந்தபடியே உள்ளன.
முதலாவதாக, விண்ணப்பங்கள் நிகாகரிக்கப்பட்டவர்களோ மேல்முறையீடு செய்வது எங்கே என தெரியாமல் தவித்து வருகிறார்கள். அதனால், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விண்ணப்பப் படிவங்களை வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்த படிவங்களை சிறப்பு முகாம்களில் அளிக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை.
எனினும், இப்படி ஒரு முகாம் நடத்தப்படுமா? என்பதில் சந்தேகம் கிளம்பி உள்ளது. காரணம், “இ-சேவை மையங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் முதல்வரின் உதவி மையங்களில் எளிதாக மேல்முறையீடு செய்யலாம் என்பதால் இதற்காக தனியாக சிறப்பு முகாம்கள் எதுவும் தேவையில்லை என்றும் கூறப்பட்டு வருகிறதாம். அடுத்ததாக, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் பலர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால், அதில் பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 கிடைக்கவில்லையாம். அதற்கான காரணம் என்னவென்றால், தங்களுக்கு 4 சக்கர வாகனம் உள்ளதால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 2 சக்கர வாகனங்களில் அவர்கள் பாதுகாப்பு நலன் கருதி வாகனத்தின் இருபுறமும் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனை நிஜமாகவே கார், வேன் போல, “4 சக்கர வாகனம்” என்று கருதி உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம்.
எனவே, இதுகுறித்தும் நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள் மாற்றுத்திறனாளிகள். அதேபோல, விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தி தந்தால், உதவியாக இருக்கும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.