மீன்கள் இயற்கை நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் முதன்மையானது. இவற்றில் புரதச்சத்து, வைட்டமின்கள், ஒமேகா 3 அமினோ அமிலங்கள், மினரல்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் என உடலுக்கு தேவையான இன்றியமையாத அனைத்து சத்துக்களும் நிறைந்து இருக்கிறது. எனவே மருத்துவர்களும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் மீன் சாப்பிட அறிவுறுத்துகின்றனர். எனினும் சில மீன்களில் பாதரசத் தன்மை அதிகமாக இருக்கிறது. இந்த மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து பல நோய்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நமது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பாதரசம் அதிகமுள்ள மீன்கள் பற்றி பார்ப்போம். சுறா மீன்கள் பாதரசத் தன்மை அதிகம் கொண்ட மீன்கள் ஆகும். இவற்றில் 0.979 பிபிஎம் முதல் 4.54 பிபிஎம் வரை பாதரசத் தன்மை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். சூரை மீன் பாதரசம் தன்மையை அதிகம் கொண்ட மற்றொரு மீன் வகையாகும். இந்த மீன்களை அடிக்கடி சாப்பிடுவதால் அவற்றில் இருக்கும் பாதரசத் தன்மை உடலின் செல்களை தாக்கி பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும் எனவே இந்த மீன் வகையையும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வாலை மீன் சுவையான மீன்களில் ஒருவகை. இந்த மீனில் பாதரசத் தன்மை அதிக அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. வாலை மீன்களில் 9.79 பிபிஎம் வரை பாதரசம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே இந்த மீன்களையும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். விலாங்கு மீனும் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய மீன் வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த மீனில் பாதரச தன்மையிருப்பதோடு பாலி குளோரினேட் பைப்பினைல் என்ற நச்சுப் பொருளும் உள்ளது. இந்த வகை மீனை உண்ணும் போது இந்த நச்சுக்கள் நம் உடலில் கலந்து பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தக்கூடும். எனவே இது போன்ற மீன்களை நம் உணவில் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்ன மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.