புதிதாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது தங்களது இருப்பிடத்திற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் தவறான பேருந்தில் சிலர் ஏறிவிடுகின்றனர். இதற்காகவே, தமிழ்நாடு அரசின் மாநகரப் போக்குவரத்துக் கழகம் ”சென்னை பஸ்” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. தாங்கள் சேரும் இடம் அறியாமல் சிரமப்படும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
மாநகர பேருந்துகளின் தற்போதைய இருப்பிடத்தையும், அடுத்த பேருந்த நிலையத்தையும், அது எவ்வளவு மணி நேரத்தில் வந்தடையும். அது சென்று சேரும் இருப்பிடத்தையும் யாருடைய உதவியும் இல்லாமல் நீங்களே அறிந்து கொள்ளலாம். இந்த செயலியானது 3,233 பெருநகரப் போக்குவரத்துக் கழக (MTC) பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலம், ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் உள்ள எம்டிசி பேருந்துகளின் நேரலை இருப்பிடத்தையும், பேருந்தின் வருகை நேரம், அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ளலாம். இந்த செயலியில் ”பஸ் ரூட்” விருப்பத்தை தேர்வு செய்து, அதில் பேருந்து எண்ணை உள்ளிடும்போது அதன் விவரங்கள் காண்பிக்கப்படும். அதுமட்டுமின்றி, அவசர நிலை ஏற்பட்டால் பயணிகள் தங்களுக்கு தெரிந்தவர்களின் தொலைப்பேசி எண்ணிற்கோ அல்லது காவல்துறைக்கோ பேரிடர் சமிக்ஞைகளை அனுப்பலாம். இச்செயலியின் வலது மூலையில் வைக்கப்பட்டுள்ள SOS பட்டன் மூலமாக அவசர கால சமிக்ஞைகளை உடனடியாகவும் காவல்துறைக்கும் அனுப்பலாம்.