இன்று (நவம்பர் 5) மற்றும் 23ஆம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அறிவித்துள்ளது.
உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், தற்போது வங்கி பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று நிறைய படிவங்களை பூர்த்தி செய்து கால் கடுக்க காத்திருந்து பணம் அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது அப்படி கிடையாது. இருந்த இடத்தில் இருந்தே யுபிஐ செயலிகள் மூலம் மற்றவருக்கு பணம் அனுப்ப முடியும்.
இந்நிலையில் தான், தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக ஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் யுபிஐ சேவை இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி யுபிஐ மற்றும் பிற பரிவர்த்தனைகள் செயல்படாது என கூறியுள்ளது. அதன்படி, நவம்பர் 5ஆம் தேதியான இன்று பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரையும், நவம்பர் 23ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் யுபிஐ சேவை செயல்படாது என அறிவித்துள்ளது.
மேலும் ஹெச்டிஎப்சி வங்கியின் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் கணக்குகளில் யுபிஐ பரிவர்த்தனை, ரூபே கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. ஹெச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் ஆப் பேபயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது. மேலும், ஹெச்டிஎப்சி வங்கி மூலம் வணிகர்களும் இந்த நேரத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அதே நேரத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் யுபிஐ சேவைகள் உடனடியாக கிடைக்கும் எனவும், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.