பலரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிப்பது டீ தான். அதிலும் ஒருசிலர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால், டீ – காஃபி இல்லாமல் இருக்க மாட்டார்கள். ஆம், சந்தோசம், துக்கம், பசி என்று பல உணர்வுகளின் போது நாம் டீ குடிப்பது உண்டு. பொதுவாக டீயை அமைதியாய் உட்கார்ந்து குடிக்கும் போது ஒரு வகையான மன நிம்மதி கிடைப்பது போல் தோன்றும்.
அதே சமயம், அவசரமான காலை நேரங்களில் பலருக்கு உணவும் இந்த டீ தான். ஆனால், காலையில் பிள்ளைகள் மற்றும் கணவரை வீட்டில் இருந்து பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் அனுப்பும் அவசரத்தில் பல பெண்கள் டீ போட்டதையே மறந்துவிடுகிறார்கள். இதனால் அனைவரும் சென்ற பிறகு காலையில் போட்ட டீயை சூடுபடுத்தி குடிப்பது உண்டு. அப்படி டீயை மீண்டும் சூடுப்படுத்தி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
டீயை மீண்டும் சூடுப்படுத்தினால் அதன் சுவை, நறுமணம் மாறுவதோடு அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பறிபோகும் அபாயமும் உள்ளது. டீ போட்டு 2 மணி நேரத்திற்கும் மேலாகும் பட்சத்தில், அதை மீண்டும் சூடுப்படுத்தக் கூடாது. அப்படி செய்தால், அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கின்றன. டீயை மீண்டும் சூடுப்படுத்தி குடிக்கையில், செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு, அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
சிலர் பாத்திரத்தில் டீ கொஞ்சமாக இருக்கும் பட்சத்தில், அதை கீழே கொட்டுவதற்கு பதிலாக, அத்துடன் பாலை மிக்ஸ் செய்து டீ போடுகிறார்கள். பழைய டீயில் சிறிதளவு நுண்ணுயிரி வளர்ச்சி இருந்தாலும், அது மொத்த டீயை பாதித்து விடும். மேலும், டீயில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தால் அதில் விரைவில் நுண்ணுயிர் வளர்ந்து விடும்.. அதனால் டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.