ஹைதராபாத்தை சேர்ந்தவர் சீமா. 50 வயதான இவர் தொடர்ந்து பியூட்டி பார்லருக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். ஹேர்கட் மற்றும் முகத்தை அழகுபடுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இவர் வழக்கம்போல் ஹேர்கட் செய்தபோது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதும் அழகு நிலையம் செல்லும் பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பெண்ணுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சுதிர் குமார் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் ட்விட்டர் பதிவில், “நான் சமீபத்தில் 50 வயதான ஒரு பெண்மணிக்கு தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் இருந்ததைப் பார்த்தேன். இது அழகு நிலையத்தில் ஹேர் வாஷ் செய்யும் போது அவருக்கு நடந்துள்ளது.

பின்னர் அவர் முதலில் இரைப்பைக் குடலியல் நிபுணரிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்குச் சரியாகவில்லை. அடுத்தநாள் அவர் நடந்து சென்றபோது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அழகு நிலையங்களில் ஹேர் வாஷ் செய்யும் போது நீண்ட நேரம் தலையைப் பின்னோக்கி சாய்த்தபடி வைத்திருப்பதால் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் காயம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் தடை படுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. இந்த நோயை ‘பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக்’ என்று அழைக்கின்றனர். இந்த நோய்க்கான அறிகுறிகள் கண்டறிந்த உடனே சிகிச்சை அளித்தால் அவர்களைக் காப்பாற்றிவிடலாம்” என தெரிவித்துள்ளார்.
பியூட்டி பார்லர் ஸ்ட்ரோக் 1993ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் மைக்கேல் வெய்ன்ட்ராப் என்பவர் கண்டுபிடித்துள்ளார். அழகு நிலையங்களில் ஹேர்கட் செய்த பெண்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைக் கண்டறிந்து, அது குறித்து அவர் எழுதிய கட்டுரை தி கார்டியன் இதழில் 2016ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.