“சீமான் மீசை வெச்ச ஆம்பளையாக இருந்தால் விசாரணைக்கு ஆஜராக வேண்டியது தானே” என தமிழர் முன்னேற்றப்படையின் தலைவர் வீரலட்சுமி விளாசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டுமென சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் அக்கட்சியை சேர்ந்த நபர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்தார்.
இதனையடுத்து ,வீரலட்சுமியை கண்டித்து கமிஷனர் அலுவலகத்திற்கு வெளியே நாம் தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய வீரலட்சுமி, ”விஜயலட்சுமியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நான் அவரை பாதுகாத்து வருகிறேன். விஜயலட்சுமி வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த வழக்கில் தொடர்பே இல்லாத அருந்ததியர் மக்களை நாம் தமிழர் கட்சியினர் இழிவாக பேசி வருகின்றனர். விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை அளித்தால் தான் சம்மனுக்கு ஆஜராகுவேன் என்று சீமான் கூறியிருப்பது முட்டாள்தனமானது. அவருக்குப் பயம் வந்துவிட்டது. நல்ல மீசை வெச்ச ஆம்பளையா இருந்தால் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டியதுதானே. ஏன் பயப்பட வேண்டும்? இன்றைக்கு அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு நான் அஞ்சமாட்டேன். சீமானின் உண்மை முகத்தை உலகறியச் செய்வேன்’’ என்று விளாசினார்.