கடந்த 2022 அக்டோபர் 19ஆம் தேதி தமிழ்நாடு இணையவழி சூதாட்டம் தடை ஒழுங்குபடுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுமதி வழங்கப்பட்டது. இந்த மசோதாவை கடந்த மார்ச் 6ஆம் தேதி ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதையடுத்து, கடந்த மார்ச் 23ஆம் தேதி மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு மறுநாள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஆளுநர் ஆர்.என். ரவி இணையவழி சூதாட்டம் தடை சட்ட மசோதாவுக்கு கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, உடனடியாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இணையவழி விளையாட்டில் ஈடுபட்டால் 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும். இணையவழி விளையாடுக்காக விளம்பரம் செய்பவர்களுக்கும் ஓராண்டு சிறை அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மேலும் இது போன்ற விளையாட்டுகளை அறிமுகப்படுத்துபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தண்டனை பெறுபவர்கள் மீண்டும் தவறு செய்யும்பட்சத்தில் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.