ஒரு விவசாய நிலத்தினையோ, காலி இடத்தையோ அல்லது கட்டிடத்துடன் கூடிய இடத்தை விற்பனை செய்யவோ அல்லது வாங்குவதற்கோ பட்டா சிட்டா கண்டிப்பாக தேவைப்படுகிறது. பட்டா சிட்டாவை வைத்தே ஒரு நிலத்தை வாங்கவோ விற்பனை செய்யவோ முடியும். தமிழ்நாட்டில் நில உடைமைக்கான ஆவணமாக பட்டா சிட்டா உள்ளது.
பட்டா சிட்டா ஆவணம் எதற்காக தேவைப்படுகிறது..? வங்கிகள் மூலம் சொத்தின் பேரில் கடன் பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் தேவைப்படுகிறது. சொத்தின் உரிமை, சொத்தின் அளவு, சொத்து அமைந்துள்ள இடம் போன்றவற்றை கொண்டே கடன் பெறும் தகுதியை முடிவு செய்கிறார்கள். விவசாயம் நிலம் மற்றும் விவசாயாம் செய்து இயற்கை அழிவுகளால் பாதிப்பு அடைந்தாலோ, நிலத்தினை அரசு உபயோகத்திற்காக எடுத்துக்கொண்டாலோ அதற்கான இழப்பீட்டுத்தொகை பெறுவதற்கு பட்டா சிட்டா ஆவணம் முக்கியமான ஆவணமாக தேவைப்படுகிறது
பட்டாவில் நில உரிமையாளரின் பெயர், நிலம் வகை, நிலம் அமைந்துள்ள பகுதி, சர்வே நம்பர் போன்ற விவரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல், கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவாக பிரிக்க நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். நிலத்தை பிரித்து தனியாக பட்டா பெறுவதற்கு பிற உரிமையாளர்களின் ஒப்புதல் கட்டாயம் தேவைப்படும்.
தனி பட்டாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது..?
தனி பட்டாவுக்கு விண்ணப்பிக்க தற்போதைய கூட்டு பட்டா, முந்தைய பட்டா நகல், பரிசளிப்பு ஆவணம், விற்பனை சான்று, பகிர்வு உடன்படிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். தனி பட்டா கோரி விண்ணப்பிப்போர், உங்கள் ஊரில் இருக்கும் தாசில்தார் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். சரியான ஆவணங்களை சமர்ப்பித்த பின், நிலத்தை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் வருவார்கள்.
மேலும், தமிழ்நாடு இ-சர்வீஸ் தளத்திற்கு சென்று “பட்டா டிரான்ஸ்பர்” என்ற விருப்பத்தை தேர்வு செய்த பின், தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து அதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்த பிறகு எந்த சிக்கல்களும் இல்லாவிட்டால், 60 நாட்களுக்குள் தனி பட்டா உங்களுக்கு கிடைத்துவிடும். கூட்டு பட்டா உரிமையாளர்கள் ஒப்புதல் தரவில்லை என்றால், நீதிமன்றம் வழியாக தனி பட்டா பெற்றுக் கொள்ள முடியும்.