2023ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஹோண்டா கார் தயாரிப்பு நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் பட்ஜெட் விலை முதல் விலை மிகுந்த சொகுசு கார்கள் வரை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. பாதுகாப்பு மற்றும் சொகுசு உள்ளிட்ட காரணங்களுக்காக ஹோண்டா கார்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏமாற்றம் அளிக்காமல் சொகுசான, நீண்ட தூர பயணத்தையும், பாதுகாப்பான பயணத்தையும் ஹோண்டா கார்கள் வழங்கி வருகின்றன. அதனால் இந்திய கார் சந்தையில் ஹோண்டா கார்களுக்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், ஹோண்டா கார் தயாரிப்பு நிறுவனம் தனது கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலை அதிகரிப்பு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. இந்த விலை உயர்வு ஹோண்டா கார்களின் ஒவ்வொரு மாடலுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிட்டி, ஹோண்டா CV, ஹைபிரிட் ஃபோர்த் ஜென் சிட்டி, அமேஸ், WR-V ஜாஸ் உள்ளிட்ட ஒவ்வொரு மாடல்களுக்கும் விலை உயர்வு வித்தியாசப்படும்.
ஹோண்டா நிறுவனத்தைப் போலவே மாருதி சுசுகி, ஹூண்டாய், கியா, டாட்டா, ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், ரெனால்ட், ஜீப் மற்றும் எம்.ஜி உள்ளிட்ட அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஹோண்டா கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்தாண்டு முடிவதற்குள்ளாகவே தங்களுக்கு விருப்பமான கார்களை வாங்கிக் கொண்டால் ஓரளவு குறைந்த விலையில் கார்களை வாங்கிக் கொள்ளலாம். WR-V, 5த் ஜென் ஹோண்டா சிட்டி உள்ளிட்ட உயர் சொகுசு கார்களை இந்த டிசம்பருக்கு உள்ளாகவே வாங்கினால் வாடிக்கையாளர்கள் 75 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் ஜனவரி 13ஆம் தேதி கிரேட்டர் நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது.
அந்த எக்ஸ்போவில் மாருதி சுசுகி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளனர். வேறு சில கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளனர். இதனால், கார்களுக்கான இந்திய சந்தை புது வருடத்தில சூடு பிடிக்கும் என்பதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளன.