நீங்கள் வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு முன்பு உங்கள், ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அதேபோல், நீங்கள் யாரிடம் இருந்து நிலம் வாங்குகிறீர்களோ அந்த நபரும் அதை செய்துள்ளாரா என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் நீங்கள் 20% வரி செலுத்த வேண்டிய சூழல் உருவாகும்.
ஆம், வருமான வரி சட்டத்தின் படி ரூ.50 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள வீடு அல்லது நிலம் வாங்குவோர் ஒரு சதவீத டிடிஎஸ் வரியை அரசாங்கத்திற்கும் 99% பணத்தை விற்பனையாளருக்கும் செலுத்த வேண்டும். பின்னர், அந்த 1% வரியை பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஆதாருடன் பான் கார்டை இணைக்க வழங்கப்பட்ட கெடு முடிந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், ரூ.50 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களை வாங்கியவர்களுக்கு, 20% டிடிஎஸ் செலுத்த கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விற்பனையாளர்களில் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படாமல் இருந்ததன் காரணமாக 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் பான் கார்டை இணைக்காததால் சில விற்பனையாளர்களின் பான் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பான் கார்டுகள் டிஆக்டிவெட் செய்யப்பட்ட ஒருசில மாதங்களில் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காதவர்களிடம் இருந்து சொத்துக்களை வாங்கியவர்களுக்கு 20% வரி செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த வரி செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் விதமாக பான் கார்டுடன் ஆதாரை இணைக்க அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.