அனைவருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது கனவு. அதற்காகத் தான் ஓடி ஓடி உழைத்து சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தை கொண்டு இடம் வாங்க நினைப்பார்கள். அப்படி நாம் வாங்கும் வீட்டு மனையை பற்றிய விவரத்தை அறிந்து கொள்வது அவசியம்.
வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்து வருகிறது. சிலர் வீடு கட்டுவதற்காகவும் சிலர் வாங்கி மீண்டும் ஒரு நல்ல ரேட் வரும்போது விற்பனை செய்வதற்காகவும் மனைகளை வாங்குகின்றனர். சிலர் விளம்பரங்களை நம்பி அதிக பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகின்றனர். இப்படியான ஏமாற்றத்தை போக்கத்தான் வீட்டு மனைகளை வாங்கும்போது நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது.
மனை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:
1) தரகர்களை மட்டுமே நம்பி வெளியூரில் வீட்டு மனை வாங்கும்போது பல விஷயங்களில் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
2)நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிய வேண்டும்.
3)காலி நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். உள்ளாட்சிகளுக்கு சரியான இடம் ஒதுக்கும்போதுதான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரும். இது மிகவும் அவசியமான ஒன்று.
4) ஊருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ளவது அவசியம்.மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்னைகள் வரக் கூடும். மேலும் மழைக்காலத்தில் நீர் தேங்கும். முக்கியமான பிரச்னை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இட வேண்டியதிருக்கும்.
5) மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும்.லே அவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கும்போது, முதலில் கேட்கப்படும் விஷயம் லே அவுட் அங்கீகாரம்தான். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டு வீட்டு மனை வாங்கினால் சிறந்தது.இல்லையென்றால் பின்னாளில் ஆபத்தாகிவிடும்.
Read More: இந்தியாவில் 1.8 லட்சம் கணக்குகளை தடை செய்த X.!! வெளியான பரபரப்பு அறிக்கை.!!