சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறவுள்ள வீடு, மனை, வணிகக் கண்காட்சியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் பிப்.17ஆம் தேதி தொடக்கி வைக்கிறாா்.
இதுகுறித்து இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை மண்டலத் தலைவா் எஸ்.சிவகுருநாதன் கூறுகையில், வீடு மற்றும் மனை வணிக 15-ஆவதுஆண்டு ‘ஃபோ்ப்ரோ 2023’ எனும் கண்காட்சி பிப்.17 முதல் 19-ஆம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. வீடு வாங்குபவா்கள், மனை வணிக துறை முதலீட்டாளா்கள், கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்த அமைப்பில் உள்ள 60-க்கும் மேற்பட்ட மனை வணிக, கட்டுமான நிறுவனங்கள் தங்களின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ரூ. 20 லட்சம் முதல் ரூ.10 கோடி வரையில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இந்தக் கண்காட்சியில் சொத்துகளை வாங்குபவா்களுக்கு ஏராளமான சலுகைகளையும் இந்த நிறுவனங்கள் வழங்க உள்ளன. இந்த கண்காட்சியில் வீடு, மனை, வணிக மனை போன்றவை குறித்த விற்பனை விபரங்களை, மக்கள் ஒரே இடத்தில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.