அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து கட்டிட நிறைவு சான்று பெறப்பட்டு அதன் பிறகு கட்டுமான நிறுவனங்களால் அடிநிலம் (UDS) மற்றும் கட்டிடமும் சேர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், கிரய ஆவணத்தில் அடிநிலம் மட்டுமே காட்டப்படுகிறது. இந்நிலையில் கட்டிட நிறைவு சான்று பெறப்பட்ட, அப்பார்ட்மெண்ட் வீடுகளை அடி நிலத்துடன் கட்டிடமும் சேர்ந்து விற்பனை ஆவணமாக பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் இந்த புதிய பத்திரப்பதிவு கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக ஒருவர் வீடு வாங்குகிறார் என்றால் அடிநிலத்தின் மதிப்புக்கு 9% பதிவுக் கட்டணமும், கட்டுமானத்திற்கு 4% பதிவுக்கட்டணமும் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இரண்டுக்கும் சேர்த்து மொத்த மதிப்பில் 9% பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இதுவரை அதிகபட்சமாக 1.15 லட்சம் ரூபாய் பதிவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 2.25 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் நிலத்தின் பிரிபடாத பங்கான யு.டி.எஸ்., பத்திரத்துக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் கட்டுமான ஒப்பந்தத்துக்கு, 1 சதவீத முத்திரைத்தீர்வை, 3 சதவீத பதிவு கட்டணம் தனியாக வசூலிக்கப்படும். பணிகள் முடிந்த வீடுகளில், யு.டி.எஸ்., பத்திரத்தில் கட்டடத்தின் பரப்பளவையும் சேர்த்து பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறது. பணிகள் முடிந்த திட்டங்களில் யு.டி.எஸ்., பத்திரத்தில், கட்டட பரப்பளவை, மதிப்பை குறிப்பிட வற்புறுத்த வேண்டாம் என்று, ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல், தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுமான பணிகள் முடிந்த திட்டங்களில் தனியாக கட்டுமான ஒப்பந்தம் பதிவு செய்யாமல் ஒரே கிரைய பத்திரமாக, வீட்டை பதிவு செய்ய வலியுறுத்தப்படுகிறது. பணிகள் முடிக்கப்படாத திட்டங்களில், ஏற்கனவே இருந்தபடி, யு.டி.எஸ்., பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்யும் நடைமுறை அப்படியே தொடரும். இதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனைக்கான பதிவு கட்டணம், எந்த விதத்திலும் உயர்த்தப்படவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.