இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்களில் அட்ஷய திரிதியையும் ஒன்று. இந்த நாள் செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் அட்ஷய திரிதியை மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளால் துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. அதனால், அட்ஷய திருதியை நாளில் மக்கள் வழிபாடு செய்வது வழக்கம்.
அட்ஷய திருதியை நாள் மங்களகரமான நாள் என்பதால், இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த ஆபரணங்கள், வீடு, சொத்துக்கள், வாகனங்கள் ஆகியவற்றை மக்கள் வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நாளில் தங்கம் வாங்கினால், தங்களிடம் உள்ள செல்வம் மேலும் பெருகும் என்பது மக்கள் நம்பிக்கை. இதனால், அந்த தினங்களில் பலரும் தங்கம் வாங்கி வருகின்றனர்.
பொதுவாகவே, தங்கம் விலை சவரனுக்கு ஆண்டுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை அதிகரித்து வந்தது. இந்தாண்டு துவங்கியதில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.70 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தான், வரும் 30ஆம் தேதி அட்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது.
இந்தச் சூழலில், தங்கம் விலையில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுவதால் வரும் நாட்களில் தங்கம் விலை குறையுமா..? அல்லது இன்னும் உயருமா..? என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதனால், பல நகைக்கடைகளில் அட்ஷய திருதியை முன்னிட்டு முன்பதிவுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ”கடந்த ஆண்டுகளில் அட்ஷய திருதியைக்கு தங்கம் வாங்கியோர், முன்கூட்டியே மொத்த பணமும் செலுத்தி முன்பதிவு செய்தனர். தற்போது, தங்கம் விலையில் ஏற்ற, இறக்க நிலை உள்ளது. இதனால், தற்போது அட்ஷய திருதியைக்கு தங்கம் வாங்க முன்பதிவு செய்ய வருவோர், 10% தொகையை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்கின்றனர்.
அட்ஷய திருதியைக்கு தங்கம் வாங்க வரும்போது, முன்பதிவு செய்திருந்த தினத்தில் இருந்து அட்ஷய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளர். அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர்.