நகரங்களில் சொந்த வீடு கனவு காண்பவர்களுக்கு வங்கிக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் இந்த மாதம் தொடங்கப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கான அடிப்படைத் தேவைகளாக இருப்பது உணவு உடை இருப்பிடம். இருப்பிடம் என்பது அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதை வாங்குவதற்கும் உருவாக்குவற்கும் செலவு பல மக்களை அந்த எண்ணத்தையே கைவிட செய்கிறது. இதை ஓரளவு சரிசெய்ய பல்வேறு மத்திய, மாநில அரசுகள் புதிய திட்டங்களைக் கொண்டுவந்துகொண்டு இருக்கின்றன. 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, நகரங்களில் சொந்த வீடு கனவு காண்பவர்களுக்கு வங்கிக் கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். நகரங்களில் வாடகை வீடுகள், அங்கீகரிக்கப்படாத காலனிகள் மற்றும் குடிசைகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு சொந்த வீடு கட்டுவதற்கு லட்சக்கணக்கான ரூபாய் உதவி வழங்குவதன் மூலம் வங்கிக் கடன் வட்டியில் நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம்,” என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த புதிய திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த திட்டத்தின் வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த அரசாங்க திட்டத்தின் பலன் என்னவென்றால், நீங்கள் கடனுக்கான வட்டியிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள் என்றார். நகரங்களில் வீடு வாங்கும் கனவில் இருப்பவர்களுக்கு கடனுக்கான வட்டியில் நிவாரணம் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் மனோஜ் ஜோஷி தெரிவித்துள்ளார்.