கடந்த காலத்தை காட்டிலும் தற்போது பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். நல்ல கிரெடிட் ஹிஸ்டரி வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். எனினும் அதிக அளவிலான கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக வங்கிகள் பல்வேறு விதமான ஆஃபர்களை வழங்குகின்றன.
இதனால் ஒரே நபர் பல கிரெடிட் கார்டுகளை வாங்கிக் கொள்கின்றனர். ஆஃபர் கிடைக்கிறது என்பதற்காக கார்டுகளை வாங்கி விட்டாலும், அவற்றை தொடர்ந்து பயன்படுத்தாத காரணத்தால் அதனை க்ளோஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு இறுதியில் வந்து விடுகின்றனர். இது ஒரு எளிதான முடிவாக இருந்தாலும், அதனை செய்வதால் ஒரு சில விளைவுகள் ஏற்படும். கிரெடிட் கார்டை ரத்து செய்ய சரியான நேரம் எது என்பதையும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதையும் தற்போது பார்க்கலாம்.
கிரெடிட் கார்டை எப்போது ரத்து செய்ய வேண்டும்?
உங்களிடம் பல கிரெடிட் கார்டுகள் இருந்தால், அவற்றில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடிவிடுவது உங்களது பொருளாதார வாழ்க்கையை எளிமையாக்குவதற்கும், மோசடி அபாயங்களிலிருந்து தப்பிப்பதற்கும் உதவுகிறது. கூடுதலாக ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் அல்லது பிற கட்டணங்களை வசூலிக்க கூடிய பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளை மூடி விடுவது நல்லது. நீங்கள் பயன்படுத்தாத கார்டுக்கு தொடர்ந்து கட்டணம் செலுத்தி வருவதால் பயன் ஒன்றும் இல்லை.
அதே நேரத்தில் உங்களது செலவு செய்யும் பழக்கத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யலாம். லோன் எடுக்க நினைக்கும் நபர்கள் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை மூடுவது ஒப்பீட்டளவில் சிறந்த வட்டி விகிதம் கொண்ட லோன்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.
கிரெடிட் கார்டுகளை மூடுவதால் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படக்கூடிய தாக்கங்கள்
கிரெடிட் கார்டை ரத்து செய்வதால் பாசிட்டிவான அதேசமயம் நெகட்டிவான விளைவுகள் ஏற்படக்கூடும். நீங்கள் கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடும் சமயத்தில் கிரெடிட் கார்டில் பேலன்ஸ் இருக்கும் பட்சத்தில், உங்களது கிரெடிட் யுட்டிலைசேஷன் விகிதத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
கிரெடிட் யுட்டிலைசேஷன் லிமிட் என்பது உங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கிரெடிட் லிமிட்டில் நீங்கள் பயன்படுத்திய கிரெடிட் தொகையாகும். உங்களது கிரெடிட் யுட்டிலைசேஷன் ரேட் குறைவாக இருந்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருக்கும். அதுமட்டுமின்றி, தாமதமாக பேமெண்ட்கள் செலுத்திய ஹிஸ்டரி கொண்ட ஒரு கிரெடிட் கார்டை மூடி விடுவது தனிநபர் கிரெடிட் ஸ்கோரில் ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை தடுப்பதற்கு உதவும்.
மேலும், கிரெடிட் கார்டை மூடுவதால் ஏற்படக்கூடிய சில ட்ராபேக்குகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இது உங்களுக்கு இருக்கக்கூடிய கிரெடிட் தொகையை குறைக்கும். இதனால் கிரெடிட் யுட்டிலைசேஷன் ரேட் அதிகமாகி, உங்களது கிரெடிட் ஸ்கோர் குறையும். அதுமட்டுமின்றி, கிரெடிட் கார்டு அக்கவுண்டை மூடி விடுவது ஒரு கிரெடிட் கார்டு ஹோல்டரின் கிரெடிட் ஹிஸ்டரி வரலாற்றின் அளவை குறைத்து விடக்கூடும். நீண்ட கிரெடிட் ஹிஸ்டரி கொண்ட நபர்கள் வைத்திருக்கக்கூடிய அக்கவுண்டுகளின் சராசரி ஆண்டு காலம் குறைவதன் காரணமாக மீண்டும் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கம் உருவாகிறது.