இந்திய சட்டப்படி, வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது என்பது சட்ட விரோதமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் தெரியாமல், ஒரு சிலர் தங்களது வாகனங்களை தங்களுக்கு பிடித்ததுபோல், மாற்றி வருகின்றனர். இதில், ஒருசிலர் போலீசாரிடம் சிக்கிக் கொண்டு, அபராதம் செலுத்துகின்றனர். மேலும், அவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
ஆனால், வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் பெரிதாக எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஒருவர் தங்களது வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்வது தவறு என்றால், அதற்கான உதிரி பாகங்களை விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது தானே நியாயம். அவர்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்பதில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது இந்த கேள்விகளுக்கு அதிகாரிகள் தரப்பில் இருந்தும் பதில்கள் அளித்து வருகின்றனர். சமீபத்தில் கூட, ஹைதராபாத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) காரை மாடிஃபிகேஷன் செய்த உரிமையாளர் மட்டுமின்றி, அதை மாற்றிக் கொடுத்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை செய்து கொடுத்த நிறுவனம் மீதும் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் பிப்ரவரி 11ஆம் தேதியன்று மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த காரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த காரின் உண்மையான நிறம் வெள்ளை. ஆனால் அந்த காரின் உரிமையாளர், வ்ராப் (Wrap) மூலம் காரின் நிறத்தை மாற்றியுள்ளார்.
ஆர்சி புத்தகத்தில் காரின் நிறம் வெள்ளை என இருந்த நிலையில், எந்தவித அனுமதியும் பெறாமல் காரின் நிறத்தை மாற்றியதால், அந்த காரின் உரிமையாளர் மீதும், காரின் நிறத்தை மாற்றி கொடுத்த நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் பிரிவு 182A(1)-ன் கீழ், அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதன்படி, ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அல்லது சிறை மற்றும் அபராதம் என இரண்டு தண்டனைகளுமே வழங்க வாய்ப்புள்ளன.
இந்தியாவில் தேவைப்பட்டால், வாகனத்தின் நிறத்தை மாற்றி கொள்ள முடியும். ஆனால், அதற்கு அனுமதி பெற வேண்டும். அத்துடன் ஆர்சி புத்தகத்திலும் சில மாற்றக்களை செய்ய வேண்டும். இல்லையென்றால், இப்படித்தான் நீங்களும் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்.