சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம் என்ற மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, “சுயதொழில் தொடங்க விரும்புவோர் வங்கிக் கடன் பெற, சென்னையில் ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பதிவு செய்யலாம்” என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “சென்னை மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ஜனவரி 27ஆம் தேதி வரை நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பங்கேற்று, தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.