5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனை பயன்படுத்தி சில மோசடிகள் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் அதிகரித்துள்ளது. அதனால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு தரப்பில் இருந்து பல அறிவுறுத்தல்களும், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறார்கள். அந்தவகையில், நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பலரும் 5G சேவையை அப்டேட் செய்து வருகின்றனர்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு, சில கும்பல் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் சிம் கார்டை 4G சேவையில் இருந்து 5G சேவைக்கு அப்டேட் செய்து தருவதாக கூறி நூதன பண கொள்ளையில் ஈடுபடுவதாகவும், இதனால் மக்கள் உஷாராக இருக்கும்படிம் சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பற்றிய அறிவிப்பில், ’உங்கள் சிம் கார்டை 5G-க்கு அப்டேட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்’ என்று உங்கள் போனுக்கு மெசேஜ் ஏதும் வந்தால் அதனை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.