வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது நிறைய மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது பொதுவாகவே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், மறைமுக கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டித் தொகையுடன் பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் என பல்வேறு மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. மறைமுகக் கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொரு கடனுக்கும் வழங்கப்படும் விவர அறிக்கையில் கடனுக்கான பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் போன்ற விவரங்களையும் வெளியிட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இது வங்கிகள் மட்டுமின்றி நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் கடன் செயலிகள் போன்றவற்றிற்கும் பொருந்தும். வீட்டுக் கடன், வாகனக் கடன், நகைக் கடன், தனிநபர் கடன் போன்ற சிறு கடன்கள் மட்டுமின்றி, சிறு குறு நடுத்தர தொழில் கடன்களுக்கும் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, இனி வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கும்போது கூடுதல் கட்டணங்கள் பற்றி ஒருவர் சுலபமக தெரிந்துகொள்ள முடியும்.