உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் குறித்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த சட்டம் அமலுக்கு வந்தால் லிவ்-இன் உறவு முறையில் இருப்பவர்கள் தங்கள் உறவுகளை பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இது குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, இனி திருமணம் செய்யாமல் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வருபவர்கள் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும். அதேபோல் லிவ்-இன் உறவில் இருந்தவர்கள் பிரிய விரும்பினால் அதையும் தகுந்த காரணத்தோடு பதிவு செய்ய வேண்டும்.
காரணம் ஏற்புடையதாக இல்லாவிட்டால் விசாரணைக்கு உத்தரவிடப்படும். மேலும், லிவ்-இன் உறவை பதிவு செய்ய தவறினால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராத தொகையை செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனை விதிக்கவும் பொது சிவில் சட்டத்தில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டம் லிவ்-இன் உறவில் இருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.