வாழ்க்கை முறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்று அனைத்திலும் முன்னேற்றம் கண்டுவருகிறோம். இப்படி இருக்கையில் மக்கள் நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் மாறி வருகின்றனர். அந்தவகையில், காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ அணிவது. அலுவலக வாசலில் நிற்கும் காவலர் முதல் சி.இ.ஓ வரை இன்று அனைவருமே ஷூ அணிகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகள், காவலர்கள், மார்க்கெட்டிங் பணிக்காக வெயிலிலும் மழையிலும் அலைபவர்கள் எனப் பலதரப்பினரும் ஷூ அணிகிறார்கள்.
சாக்ஸில் கெட்டியானது, மெல்லியது, பருத்தியால் ஆனது, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பிரத்யேகமானது எனப் பல வகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. கெட்டியானவற்றைக் குளிர்காலத்தில் அணியலாம். மெல்லியவை குழந்தைகளுக்கு ஏற்றவை. பருத்தியால் ஆனவை கோடைக்கு ஏற்றவை. வெரிக்கோஸ் வெயின் பிரச்னை, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காகப் பிரத்யேகமான சாக்ஸ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.
வெயில் காலத்தில், பாதங்களின் வியர்வையை சாக்ஸ் உறிஞ்சிவிடும். குளிர் காலத்தில், உங்கள் கால்களை அளவுக்கு அதிகமான குளிர்ச்சியில் இருந்து காக்கும் பொறுப்பும் சாக்ஸ்களுடையதுதான். 50 சதவிகிதக் குளிரை சாக்ஸ் தடுக்கும் என்பது ஓர் ஆய்வின் முடிவு. கால் பாதங்களில் வியர்க்கும்போது உருவாகும் பூஞ்சைத் தொற்றுகளிடம் இருந்து சாக்ஸ்கள் பாதங்களைப் பாதுகாக்கும். தொடர்ந்து சாக்ஸ் அணிபவர்களின் கால்களில் பாதவெடிப்புகள் இல்லாமல் இருப்பதைக் கவனிக்கலாம்.
சர்க்கரை நோயாளிகள் தரமான ஷூ மற்றும் சாக்ஸ்கள் அணிந்து கால்களைப் பாதுகாத்தல் மிகவும் அவசியம். ஏனெனில், சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, கால் நரம்புகளின் உணர்தல் திறன் குறைந்திருக்கும். கால்களில் காயம் ஏதும்பட்டாலும், உடனடியாக உணரமுடியாது. மேலும், சர்க்கரை நோயாளிகளின் உடலில் ஏற்படும் காயங்கள் குணமாகவும் தாமதமாகும். எனவே, சாக்ஸ், ஷூ அணிவதன் மூலம் சிறு சிறு சிராய்ப்புகள், காயங்களைத் தடுக்கலாம்.
சாக்ஸைக் கழற்றிய பின்னர் கால்களைக் கழுவி, ஈரமின்றித் துடைக்க வேண்டும். சாக்ஸ்களைச் சுத்தமாகப் பராமரியுங்கள். காலில் படிந்துள்ள வியர்வையில் வெளியேறும் பாக்டீரியா, வெளியில் உள்ள பாக்டீரியா ஆகியவற்றால் சாக்ஸில் பூஞ்சைத்தொற்று ஏற்படுவதால்தான் அழுக்கான சாக்ஸில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தத் தொற்று, நகங்களில் நுழையும்போது சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஈர ஷூ, சாக்ஸுடன் வெகுநேரம் சுற்றிக் கொண்டிருப்பதும் உடலுக்குத் தீங்கானதே. மழைக்காலங்களில் ஷூ, சாக்ஸ்கள் ஈரமாக நேர்ந்தால், அவற்றை உடனே மாற்ற வேண்டும். ஏனெனில், தேங்கிய மழைநீரில் எண்ணற்ற நுண்ணுயிரிகள் இருக்கும். இவை, நாம் புழங்கும் இடங்களில் பரவும்போது தொற்றுநோய்கள் உருவாகின்றன.