நாளையும், நாளை மறுநாளும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
ஜனவரி 18ஆம் தேதியான நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், ஜனவரி 19ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மிதமான மழை
அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.