முன்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Anterior Pituitary Gland) உற்பத்தியாகும் புரோலாக்டின் (Prolactin) ஹார்மோன் தான், தாயின் மார்பகங்களில் உள்ள பால்சுரப்பிகளில் இருந்து பால் சுரக்க காரணியாகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளில் உள்ள நரம்புகளில் இருந்து சமிக்ஞைகள் முன்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, புரோலாக்டின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன.
இந்த புரோலாக்டின் ஹார்மோன் நேரடியாக மார்பகங்களிலுள்ள பால்சுரப்பிகளைத் தூண்டி, தாய்ப்பாலைச் சுரக்கச் செய்கின்றன. இவ்வாறு, தூண்டுதல் முதல் பால் சுரத்தல் வரை நிகழும் சுழற்சியை, புரோலாக்டின் மறிவினை (Prolactin reflex) அல்லது பால் சுரத்திடும் மறிவினை (Milk Secretion reflex) என்பர். தாயின் மார்பகத்தை குழந்தை அதிகமாகச் சப்பும்போது, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும். குழந்தை பிறந்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக தாயின் மார்பகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதோ, அவ்வளவு சீக்கிரம் ‘பால் சுரத்திடும் மறிவினை’ தொடங்கிவிடும்.
அதனால்தான், குழந்தை பிறந்தவுடனே தாய்ப்பால் கொடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தேவை அதிகரிக்கும்போது, தாய்ப்பால் சுரப்பதும் அதிகரிக்கும். அதனால்தான், ஒவ்வொரு 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறையும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். புரோலாக்டின் ஹார்மோன், இரவு நேரத்தில் உற்பத்தி ஆவதால், புரோலாக்டின் மறிவினை தொடர்வதற்கு, இரவு நேரத்தில் தாய்ப்பால் அளிப்பது மிக அவசியமாகும்.
பின்புற பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து (Posterior Pituitary Gland) உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் (Oxytocin) ஹார்மோன் தான் தாய்ப்பாலானது, பால் சுரப்பிகளில் இருந்து வெளிவருவதற்கு காரணம். ஆக்ஸிடோசின் ஹார்மோன், பால்சுரப்பிகளைச் சுற்றியிருக்கும் தோலிழைம செல்களை (Myoepithelial cells) சுருங்கச் செய்து, பால்சுரப்பிகளில் இருந்து தாய்ப்பாலை வெளியேற்றி, பாலேந்து நாளங்களுக்கு (Lactiferous sinuses) தாய்ப்பாலைக் கடத்துகிறது. தாயின் மார்பகத்தை குழந்தை சப்பும்போது, காம்புகளிலுள்ள நரம்புகளிலிருந்து சமிக்ஞைகள் பின்புற பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டி, ஆக்ஸிடோசின் ஹார்மோனை சுரக்கச் செய்கின்றன.
இவ்வாறு, தூண்டுதல் முதல் தாய்ப்பால் வெளிவருதல் வரை நிகழும் சுழற்சியை, ஆக்ஸிடோசின் மறிவினை (Oxytocin reflex) அல்லது பால் வெளியேற்றும் மறிவினை (Milk Ejection reflex/ Let-down reflex) என்பர். ஆக்ஸிடோசின் ஹார்மோனானது, குழந்தை பால் குடிக்கும்போது மட்டுமல்லாமல், குழந்தையை பற்றி நினைக்கும்போதும், குழந்தையைப் பார்க்கும்போதும், குழந்தையின் ஒலியைக் கேட்கும்போதுகூட சுரந்திடும்.
எனவே, தாயின் உணர்வுகள், பால் வெளியேற்றும் மறிவினையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடுமென்பதால், மன அமைதி மற்றும் நம்பிக்கையுடன் தாய்ப்பால் அளிக்கும்போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். மாறாக கவலை, மன அழுத்தம், வலி மற்றும் நம்பிக்கையின்மை போன்றவை, ஆக்ஸிடோசின் மறிவினையில் இடையூறு ஏற்படுத்துவதால், பால் சுரத்தல் மிகவும் குறையக்கூடும். குழந்தை பிறந்த முதல் 2-4 நாள்களில் உற்பத்தியாகும் சீம்பாலின் (Colostrum) அளவு குறைவாகவே இருக்குமென்பதால், முதல் சில நாள்கள் தாய்ப்பாலின் அளவு குறைவாகவே இருக்கும். அதனை தொடர்ந்து தாய்ப்பாலின் அளவு அதிகரிக்கும். எனவே, தாய்ப்பால் அதிகம் சுரக்கவில்லை என்று மீண்டும்மீண்டும் நினைத்து அழுத்தத்திற்கு உள்ளாகாமல், நம்பிக்கையுடன் நீங்கள் தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க்கினாலே, தாய்ப்பால் சுரப்பு தானாக அதிகரிக்கும்.