அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் விவாதிக்க தயாரா? என முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக ஆட்சியில் தமிழகம் பாதாளத்திற்கு சென்றதாகவும், தொழில் வளம் முன்னேற்றம் அடையவில்லை எனவும் முதல்வர் முக.ஸ்டாலின் அரசு விழா ஒன்றில் பேசியுள்ளார். ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக்கு இந்தியா டுடே இதழ் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக விருது கொடுத்துள்ளனர். மக்களை பற்றி முதல்வருக்கு கவலை இல்லை. தனது குடும்பத்தை பற்றி தான் முதலமைச்சருக்கு கவலை. திமுகவுக்கு வாக்களித்த மக்கள் வயிறு எரிந்து போய் உள்ளனர். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் நல திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஏழை எளிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் திமுக அரசு வந்த உடன் கைவிடப்பட்டுள்ளது. 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தோம் உங்களால் ஒரு மருத்துவ கல்லூரி கொண்டு வர முடியவில்லை. தமிழகத்தில் அதிக தொழிற்சாலை கொண்டு வந்தது அதிமுகதான். 18 மாத திமுக ஆட்சியில் எப்படி சாத்தியம் ஆகும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட திட்டங்கள் குறித்தும், திமுகவின் 18 மாத ஆட்சியின் சாதனைகள் குறித்து பொது இடத்தில் தன்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா? என எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து திமுக எம்பிகள் பாராளுமன்றத்தில் ஏன் கேள்வி எழுப்பவில்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.