ஓய்வு முடிவைப்பற்றி யோசிப்பதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்றும் தற்போது எதையும் கூறி பயிற்சியாளரை மன அழுத்தத்தில் விடுவதற்கு விரும்பவில்லை என்று சென்னை அணியின் கேப்டன் தல தோனி கூறியுள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் தொடங்கின. அன்றுமுதல் தற்போது வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தல தோனி இருந்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல் தொடரில் மட்டுமே தோனியை பார்க்க முடிகிறது. ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக இருந்துவரும் தோனி, சிஎஸ்கே அணிக்காக இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தனது ஓய்வு முடிவை எப்போது அறிவிப்பார் என அவ்வப்போது பேசப்படுவது வழக்கம்.
இதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில், ஓய்வு முடிவு பற்றி கேட்கப்பட்டபோது தோனி நிச்சயமாக இல்லை, அடுத்த வருடமும் விளையாடுவேன் என கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சீசனுடன் ஓய்வு பெறுகிறீர்களா என்பதை தோனியிடம் நேரடியாகவே சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு இப்போது அதை தெரிவித்தால் அது பயிற்சியாளர் உட்பட சென்னை அணியினரிடம் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்கி விடும் என்று தோனி கூறினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பற்றிய முடிவு எடுக்க நிறைய நேரம் உள்ளது. எனவே தற்போதைக்கு எங்களுக்கு நிறைய போட்டிகள் காத்திருக்கும் இந்த சூழ்நிலையில் நான் அதை சொன்னால் அது பயிற்சியாளர் உட்பட அனைவருக்கும் அழுத்தத்தை உண்டாக்கும்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.