சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் வாகனத்தை பார்க்கிங் செய்வோருக்கான கட்டணம் இன்று முதல் உயர்கிறது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடங்களில் 42 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. 10 ரயில் நிலையங்களில் இரு சக்கர வாகன நிறுத்தம் மட்டும் உள்ளது. மற்ற நிலையங்களில் இரு சக்கர, 4 சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது.
இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிக்காமல் ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்திச் செல்பவர்களால் இடபற்றாக்குறை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மெட்ரோவில் பயணிப்போர் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லா நிலை உள்ளது. எனவே, இதை கட்டுப்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு முடிவு செய்துள்ளது.
அதன்படி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்யாமல் மெட்ரோ நிலையத்தில் உள்ள பார்க்கிங்கை மட்டும் பயன்படுத்துவோருக்கான கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில், இரு சக்கர வாகனங்களை நிறுத்த 6 மணி நேரத்திற்கு 20 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு மேல் 40 ரூபாயும், சேவை நேரத்தை கடந்தால் 50 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
அது போல் 4 சக்கர வாகனங்களுக்கு 6 மணி நேரத்திற்கு 30 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு 40 ரூபாயும், 12 மணி நேரத்திற்கு மேல் 50 ரூபாயும், சேவை நேரத்தை கடந்தால் 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அதே நேரம் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு முந்தைய கட்டணமே தொடரும். அவர்களுக்கு கட்டண தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ”மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துவிட்டு அதே நாளில் வாகனத்தை திரும்ப எடுக்கும் போது வாகன நிறுத்த கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாதாந்திர வாகன நிறுத்த அட்டையை பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பயணிகள் கடந்த 30 நாட்களில் மேற்கொண்ட பயணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த கட்டண தள்ளுபடி வழங்கப்படும்” தெரிவித்துள்ளனர்.