நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு 200 ரூபாயும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், மற்றும் பட்டதாரிகளுக்கு 600 ரூபாய் வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 600ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு 750ம் பட்டதாரிகளுக்கு 1000ம வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் 72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரார் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் மூலம் எந்தவித நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.