தன் மகன் ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகி விளையாட துவங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த உருக்கமான ட்விட் வைரலாகி வருகிறது.
கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமாகி பலரது கவனத்தை பெற்றவர் ஆவார். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் அவர் மும்பை அணியில் இடம்பெற்று இருந்தாலும், 2023 ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம் ஆகி விளையாடியுள்ள நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் தன் மகன் ஐபிஎல்-லில் முதல் முறையாக அறிமுகமாகி விளையாட துவங்கியது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த உருக்கமான ட்விட்டும் தற்போது வைரலாகி வருகிறது.
மகன் அர்ஜுனுக்கு சச்சின் அறிவுரை வழங்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார் அதில் “அர்ஜுன், இன்று நீ கிரிக்கெட் வீரராக உனது பயணத்தில் இன்னொரு முக்கியமான அடி எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, உன்னை நேசிக்கும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட ஒருவனாக, விளையாட்டிற்குத் தக்க மரியாதையைத் தொடர்ந்து அளிப்பாய், விளையாட்டும் உன்னை நேசிக்கும் என்று எனக்குத் தெரியும். நீ இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளாய். அதைத் தொடர்ந்து செய்வாய் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!” என்று தெரிவித்திருந்தார்.