டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் இப்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 9ம்) பிற்பகல் 2:30 மணிக்கு இவ்வழக்கு மீண்டும் நீதிபதி ஸ்வா்ண கந்த ஷர்மா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பளித்தது.
மேலும், தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறை தன்னை கைது செய்துள்ளது என்ற கெஜ்ரிவாலின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், கைது செய்யப்பட்டதில் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அரசியல் பிரச்னைகளை நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வர முடியாது என கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், முதலமைச்சர் என்பதால் கெஜ்ரிவாலுக்கு எந்த ஒரு சிறப்பு சலுகையும் வழங்க முடியாது என கூறியுள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லுபடியாகும் என தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், கைதுக்கு எதிரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.