ஒருகாலத்தில் வயதானவர்கள், பல்வேறு உடல்நிலை பிரச்சனை இருந்தவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டது.. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மாரடைப்பு என்பது சாதாரணமான விஷயமாகி விட்டது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்களும் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர்.. குறிப்பாக இளைஞர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.. அதிலும் மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.. இதய நோய்கள் ஆண், பெண் என இரு பாலினருக்கும் சமமாக பரவுகின்றன.
மாரடைப்புக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு என பல ஆபத்து காரணிகள் உள்ளன.. ஆனால் இப்போது ஆபத்து காரணி இல்லாமல் கூட மாரடைப்பு வரலாம். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இது தெரியவந்துள்ளது. மாரடைப்பின் போது 4 பேரில் ஒருவருக்கு பொதுவான ஆபத்து காரணிகள் இல்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆபத்தில் உள்ள மற்றும் ஆபத்தில் இல்லாத குழுக்களுக்கு இடையே எல்லா காரணங்களிலிருந்தும் இறப்பு ஒரே மாதிரியாக இருந்தது. செப்டம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019 க்கு இடையில் மருத்துவமனை மாரடைப்பு பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்ட 2,379 பேரின் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஆய்வின் முதன்மை ஆசிரியரும், சென்னை மருத்துவக் கல்லூரியின் இதயவியல் கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் ஜி ஜஸ்டின் பால் இதுகுறித்து பேசிய போது “ ஆபத்து காரணிகள் இல்லாதவர்கள், இறக்கும் ஆபத்து உண்மையில் அதிகம் என்று சில காரணிகள் காட்டுகின்றன. ஆபத்து காரணிகளைக் கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதற்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.. எனவே அவர் உயிரோடு இருக்கவும் வாய்ப்புள்ளது.. ஆனால் ஆபத்து காரணிகள் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை..” என்று தெரிவித்தார்.
4 ஆபத்து காரணிகளில் எதுவுமே இல்லாமல் ஆண்களை விட அதிகமான பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியத்திற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்களுக்கு மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை என்றும் கூறப்படுகிறது..