கோவையில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். கோவை கொடிசியா வளாகத்தில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மகன் கௌசிக் தேவ்விற்கும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேத்தி ஸ்ரீநிதிக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 1972-ஆம் வருடம் பொங்கலூர் பழனிச்சாமி திருமணத்தையும், 1999 ல் பொங்கலூர் பழனிச்சாமி மகன் பைந்தமிழ்பாரி திருமணத்தையும் கருணாநிதி நடத்தி வைத்தார், அவர் இருந்திருந்தால் இந்த திருமணத்தையும் நடத்தி இருப்பார் என தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி 6 வது முறையாக நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் அத்தனைத்தும் நிறைவேற வில்லை, 70 சதவீதம் நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமுள்ள 30 சதவீதத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம் என கூறினார். மக்கள் எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என கூறிய முதலமைச்சர், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்த போது மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டோம் ஆட்சிக்கு வந்த 100 நாளில் தீர்க்கப்படும் என உறுதியளித்தோம் என தெரிவித்த முதலமைச்சர், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, பெறப்பட்ட மனுக்களில் இருக்கும் கோரிக்கைகள் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
இதற்காக தனியாக கன்ட்ரோல் ரூம் வைத்து செயல்படுத்துகின்றோம் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை நான் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்கிறேன் என கூறினார். கடந்த முறை கோரிக்கை நிறை வேற்றப்பட்ட ஒருவரிடம் டெலிபோன் மூலம் பேசிய போது, பத்து ஆண்டுகளாக நடக்காத வேலை பத்து நாட்களில் முடிந்து விட்டதாக அவர் பூரிப்போடு சொன்னதாக கூறினார்.
ஆனால் தேர்தல் சமயத்தில் அளித்த உறுதி மொழிகள் எதையும் நிறைவேற்ற வில்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். ஆனால் பெண்களுக்கு இலவச பஸ், பால்விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என பல வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன என கூறினார். வரும் 5-ஆம் தேதி டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை தமிழகத்திற்கு அமைத்துள்ளோம். மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறார். அன்றைய தினமே அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டமும் துவங்கப்பட உள்ளன என தெரிவித்தார்.
மேலும் இன்று வரும் போது கூட சிலர் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து கேட்டார்கள். பெண்களுக்கு உரிமை தொகையாக 1000 ரூபாய் நிதி நிலைமை சரியானவுடன், உறுதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இந்த திருமண விழாவில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.