சர்வதேச கிரிக்கெட்டில் 709 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் அதிக விக்கெட்கள் எடுத்தவர் பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறினார்.
வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட்கள் எடுத்த அஷ்வின் இந்தியாவிற்காக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி 709 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது, இதில் அதிகபட்சமாக அஷ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தினார், இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 421-5 ரன்களுக்கு டிக்ளர் செய்ய இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சிலும் அஷ்வின் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்கள் எடுத்தார். இதன் மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 12 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் அஷ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட் எடுத்த கும்ப்ளேவிற்கு (953 விக்கெட்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்பாக 707 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்கு தள்ளி அஷ்வின் தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.