ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்தும் 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்தவகையில், கொழும்புவில் இன்று மதியம் 3 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முன்னதாக பல்லகெலேயில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொழும்புவில் கனமழை பெய்துவரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தின் போது மழை குறுக்கீடு செய்தால், மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுலின் வரவால் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் முழுமையான ஓய்வுக்கு பின் கேஎல் ராகுல் நேரடியாக இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பை நெருங்குவதால் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் ஒருவர் நிச்சயம் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் இஷான் கிஷன் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதோடு, இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவரை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறும் ஸ்ரேயாஸ் ஐயர் பெஞ்ச் செய்யப்படலாம் என்று தெரிகிறது.தொடக்க வீரரகளாக ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணி பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிளேயிங் லெவனில்,ஒரு ஸ்பின்னரை குறைத்து 4வது வேகப்பந்துவீச்சாளரை அந்த அணி இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.