நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களை வரலாறு காணாத கனமழை வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஆயன்குளம் அதிசய கிணறு பல ஆயிரம் கன அடி வெள்ள நீரை சர்வ சாதாரணமாக உள்வாங்கிக் கொண்டே இருக்கிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தன் மொழி ஊராட்சிக்குட்பட்டது ஆயன்குளம். இங்குள்ள கிணறு ஒன்றுதான் சில ஆண்டுகளுக்கு முன்னர் தலைப்புச் செய்தியாக மாறியது. ஒவ்வொரு மழை வெள்ளத்தின் போதும் பல ஆயிரம் கன அடி உபரி நீர் இந்த கிணற்றுக்குள் திருப்பிவிடப்படும். ஆனால், ஒருமுறை கூட இந்த கிணறு நிரம்பி வழிந்ததே இல்லை என்பதுதான் அதிசயம். இதனால் இந்த அதிசய கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஆய்வும் நடத்தினர். அப்போது இந்த கிணறின் தன்மை, கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து விவாதங்கள் நடந்தன.
தற்போது நேற்று காலை முதல் தற்போது வரை தென் மாவட்டங்களை கனமழை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆயன்குளம் அதிசய கிணறுக்குள்ளும் பல ஆயிரம் கன அடிநீர் திருப்பிவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை ஆயிரம் கன அடி நீரையும் கொஞ்சமும் சளைக்காமல் இந்த ஆயன்குளம் அதிசய கிணறு உள்வாங்கிக் கொண்டே இருப்பதுதான் இப்பெருமழையிலும் ஆச்சரியமானதாக இருக்கிறது.