சட்டப்பேரவை நடுநிலையாக செயல்படவில்லை.. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்..
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை கொடுக்க மறுப்பதை கண்டித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.. பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் “ கடலூரில் 6 வயது சிறுமிக்கு திமுக கவுன்சிலர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். நேற்றைய தினம் இரவே குழந்தையின் பெற்றோர், பாலியல் வன்கொடுமை குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்..
ஆனால் காலை 9 மணி வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை அதிகரித்து வருகிறது.. இரவு 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை குற்றவாளியை கைது செய்யவில்லை.. அவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அவரை கைது செய்யவில்லை.. 13 மணி நேரம் கழித்தே குற்றவாளி கைது செய்யப்பட்டார்.. ஆனால் முதலமைச்சர் தகவல் கிடைத்த உடனே கைது செய்ததாக கூறுகிறார்.. உளவுத்துறை மூலம் இந்த தகவல் அரசுக்கு கிடைத்திருக்கும்.. கொடுங்குற்றம் குறித்து அரசுக்கு தகவல் கிடைக்கவில்லை எனில் இந்த அரசு எப்படி செயல்படுகிறது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்..
இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசியதை நேரலையில் காட்டவில்லை.. என்னுடைய கேள்வியை நேரலை செய்யாமல், முதலமைச்சர் அளித்த பதில் மட்டும் நேரலை செய்யப்படுகிறது.. இதை கண்டித்து தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.. சட்டமன்றம், ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.. பேரவை நடுநிலையாக செயல்படவில்லை.. சபாநாயகர் ஆளுங்கட்சியின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படுகிறார்..” என்று தெரிவித்தார்..