கடலூர் சிறையில் பணிபுரியும் உதவி ஜெயிலர் வீட்டுக்கு தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறைவார்டன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் மத்திய சிறையில் உதவி சிறைக்காவலராக பணி புரிபவர் மணிகண்டன் . இவர் சிறைக்கு அருகில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார் . கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி காலை வீட்டில் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக மணிகண்டனின் குடும்பத்தினர் உயிர்தப்பினர். பெட்ரோல் வாசனை வந்ததால் வீட்டில் இருந்து நபர்கள் ஓடிச் சென்று பக்கத்து அறையில் பார்த்துள்ளனர். புகை மூட்டம் காணப்பட்டதால் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தது மட்டுமின்றி சமையறைக்கு தீ பரவாமல் இருக்க முன்னேற்பாடாக சிலிண்டரை வேறு பகுதிக்கு இடம் மாற்றி உள்ளனர். இதனால் அவர்களின் குடும்பத்தினர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். சிறையில் கைதியின் செல்போனை பறிமுதல் செய்ததால் கூலிப்படை மூலம் கொலை செய்ய முயற்சி நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்ததில் அதே சிறையில் உதவி வார்டனாக பணிபுரியும் செந்தில்குமார் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமார் மற்றும் தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் தினேஷ் என்பவர் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.