திருப்பதி கோவிலில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.140 கோடி உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மார்ச் முதல் தொடர்ந்து 6 மாதங்களாக உண்டியல் வருமானம் ரூ.100 கோடியை கடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பக்தர்கள் ரூ.140 கோடியே 70 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சுமார் 22.80 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். திருப்பதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானத்துடன் இணைந்து கட்டப்பட்டு வரும் ‘நிவாச சேது’ மேம்பாலத்தின் முதற்கட்ட பணி முடிந்துள்ளது.

திருப்பதி பஸ் நிலையம் முதல் அலிபிரி சாலை வரையிலான மேம்பாலத்தை 3 மாதங்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். மீதமுள்ள பணிகள் குறித்து நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த மேம்பால பணிகள் முடிந்தால், சென்னை மற்றும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து வரும் பக்தர்கள் திருப்பதி நகர நெரிசலில் சிக்காமல் விரைவாக அலிபிரி சென்றடையலாம்.