நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, கணவர் தனுஷை பிரிந்து தனது தந்தையின் போயஸ் தோட்ட இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை. அவை வைரம், ரத்தினக் கற்களால் ஆனவை. 18 ஆண்டுகளாக அந்த நகைகளை சேர்த்து வைத்துள்ளேன். அவற்றில் பாரம்பரிய நகைகளும் இருந்தன. லாக்கரின் சாவியை நான் வைக்கும் இடம் எனது வீட்டு பணிப்பெண்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அவர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் ஐஸ்வர்யா, தனுஷ், ரஜினி வீட்டில் பணியாற்றியவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் ஈஸ்வரி என்ற பணிப்பெண் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் வீட்டிலிருந்து வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டதாக தெரிகிறது. உடனே இதுறித்து ஈஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நகைகளை திருடியதை அவர் ஒப்புக் கொண்டார். இதுகுறித்து ஈஸ்வரி கூறுகையில், நான் ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஐஸ்வர்யா வீட்டில் இல்லாத நேரத்தில் நான் சிறுக சிறுக திருடினேன்.
இதை ஒரு நாள் டிரைவர் வெங்கடேசன் பார்த்துவிட்டார். இதனால் நான் திருடிய தொகையில் அவருக்கும் பங்கு கொடுப்பதாக கூறினேன். இதனால், அவரும் எனக்கு உடந்தையாக இருந்தார். காரில் செல்லும் ஐஸ்வர்யா எங்கே செல்கிறார், எப்போது வருகிறார் என்ற தகவல்களை வெங்கடேசன், எனக்கு அவ்வப்போது கொடுத்து வந்தார். இதனால் நான், ஐஸ்வர்யா வந்துவிடுவார் என்ற அச்சம் இல்லாமல் நகைகளை திருடி வந்தேன். திருடிய நகைகளை ஒரு கடையில் விற்று அந்த பணத்தில் வெங்கடேசனுக்கு கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை எனது கணவர் அங்கமுத்துவின் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவேன். இப்படி செய்து சோழிங்கநல்லூரில் ஒரு கோடியில் சொகுசு பங்களா வாங்கியுள்ளேன். எனது மகள் திருமணத்தை நடத்தியுள்ளேன். அத்துடன் எனது கணவருக்கு காய்கறி கடை வைத்து கொடுத்துள்ளேன்.
இளைய மகளுக்கு மளிகைக் கடை வைத்துள்ளேன். ஐஸ்வர்யா, தனுஷ் இருவரும் ஒன்றாக இருந்த போது வீட்டிற்கு தேவையான காய்கறி, மளிகைப் பொருட்களை நான்தான் வாங்க செல்வேன். அப்போது என் கணவர், மகளின் கடைகளில் பொருட்களை வாங்கி ஐஸ்வர்யா, தனுஷ் கொடுக்கும் பணத்தை இவர்களிடம் கொடுத்துவிடுவேன். இவ்வாறு நான் மாதம் ரூ.50 ஆயிரம் வரை பொருட்களை எங்கள் சொந்த கடையிலேயே வாங்கியுள்ளேன். மேலும், எனக்கு ஐஸ்வர்யா மாத ஊதியமாக ரூ.30 ஆயிரம் கொடுத்து வந்தார் என்று போலீசாரிடம் ஈஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.