கேரளாவில் நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை என சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ். மணிக்குமார். இவர் மீது நடந்த தாக்குதல் முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான தலைமை நீதிபதியை தாக்க முயன்ற மர்ம நபர் ’’இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை’’ எனகூறிக்கொண்டே தாக்க முயன்றார். அவரை கைது செய்துபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிச் செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிபதியின் காரை அடையாளம் கண்டு அதன் குறுக்கே பாய்ந்த மர்ம நபர், நீதிபதியை குறிவைத்து தாக்க முயற்சித்திருக்கிறார். நீதிபதியின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த மர்ம நபரை பிடித்து போலீஸ் வசம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அந்த நபரின் பெயர் டிஜோ என்றும், இடுக்கியின் உடும்பன்சோலா பகுதியை பூர்விகமாக கொண்டவர் என்பதும், தற்போது கொச்சியின் லாரி டிரைவராக பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்தது.
‘நீ தமிழன்தானே..’ என்றபடி பாய்ந்த டிஜோ, ’இது ஒன்றும் தமிழ்நாடு கிடையாது’ என்று சீறியபடி நீதிபதையை தாக்க முயற்சித்திருக்கிறார். சம்பவத்தின்போது டிஜோ போதையில் இருந்ததாகவும் தெரிய வந்திருக்கிறது. அதானி நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்படும் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு எதிராக அங்குள்ள் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மற்றும் திருச்சபைகளின் ஆதரவோடு, துறைமுக திட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவை தொடர்பான வழக்குகளில் கேரள உயர் நீதிமன்றம் சில கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. அண்மையில் மத்திய பாதுகாப்பு படைகளின் உதவியோடு துறைமுக பணிகளுக்கான பாதுகாப்பினை மாநில அரசு மேற்கொள்வது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது, போராட்டக்காரர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்ப்புக்கு ஆளானது.
துறைமுக திட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் அவற்றுக்கு எதிரான நீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆகியவற்றின் பின்னணியில் நீதிபதி எம்.மணிக்குமார் மீதான தாக்குதல் முயற்சி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் முலவுக்காடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த எம்.மணிக்குமார் சென்னை சட்டக்கல்லூரியில் பயின்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ல் நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக 2019, அக்டோபர் முதல் பணியாற்றி வருகிறார்.